உமது நம்பிக்கை பெரிது
உமது நம்பிக்கை பெரிது
குருவாக திருநிலைப் படுத்தப்பட்ட பிறகு, எங்களது மறைமாவட்டத்தில் உள்ள சுந்தரநாச்சியார் புரம், மற்றும் அண்ணாநகர் ஆகிய பங்குத்தளங்களில் உதவிப் பங்குப்பணியாளராக பணியாற்றினேன். அந்த இரண்டு வருடங்களில், கிறிஸ்தவர்களைக் கடந்து பல சமயங்களை பின்பற்றக்கூடிய மனிதர்களும், ஆலயத்தில் செபிப்பதற்கு வருவார்கள். சில மனிதர்கள் தங்களுடைய அனுபவத்தை பகிர்ந்து கொள்வார்கள். எத்தனையே மருத்துவர்கள் கைவிட்ட நிலையில், இந்த ஆலயத்தில் அன்னையிடம் செபித்தோம்: இன்று நலமாக உள்ளோம், குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் தீர்ந்தது என்று சாட்சி கூறுவார்கள். ஒவ்வொருவரும், அவர்களுக்குரிய வழியில் இறைநம்பிக்யை தனித் தண்மையோடு வெளிப்படுத்தினார்கள்.
கடவுளின் அருள், மீட்பு, கொடை, வாழ்வு என்பது ஒரு குறிப்பிட்ட சமுகத்தைச் சார்ந்தவர்களுக்கு மட்டுமே என்ற எண்ணம் தவறானது. மீட்பு என்பது அனைவருக்குமானது. அந்த மீட்பை ஒவ்வொருவரும் தனது நம்பிக்கை, செயல்பாடுகள் வழியாகத்தான் பெற்றுக்கொள்ள முடியும்.
யூதர்கள் தங்களுக்கு மட்டுமே மீட்பு உண்டு, மற்றவர்களுக்கு இல்லை என்று நம்பினார்கள். ஏனெனில் தங்களை மட்டுமே கடவுள் தேர்ந்து கொண்டார் என நம்பினர். இதன் காரணமான ஏனைய மக்களினத்தாரை இகழ்ந்தார்கள், வெறுத்தார்கள். விவிலிய மீட்பு வரலாற்றை பார்க்கும்போது, கடவுள் அனைவருக்கும் பொதுவானர். ஒரு தாய், தான் பெற்றெடுத்த குழந்தைகளை பிரித்துப் பார்ப்பதில்லை. அனைவரையும் சமமாக அன்பு செய்யக்கூடியவர். அதைப் போன்றுதான், கடவுள் அனைத்து மக்களினத்தாருக்கும் கடவுள். இன்றைய வாசகங்களும் இதைதான் நமக்கு சுட்டிக் காட்டுகின்றது.
நற்செய்தி ஒரு குறிப்பிட்ட இனத்தாருக்கு மட்டுமல்ல, மாறாக அனைவருக்கும் அறிவிக்கப்படவேண்டும்.
மீட்பு அனைவருக்கும் உரியது. புறஇனத்தார்கள், பிறசமயத்தார்கள் கிறிஸ்துவின் வழியில், நற்செய்தின் ஒளியில் வாழ்கின்றபோது மீட்பு அடைவார்கள்.
மேலும், கனானியப் பெண்ணின் நம்பிக்கை, விடாமுயற்சி மற்றும் தாழ்ச்சி நிறைந்த பண்பை இயேசு வியந்து பாராட்டுகின்றார்.
மத்தேயு 8:10ல் இயேசு சுட்டிக்காட்டும் நூற்றுவர் தலைவனைப் போன்று, கனானியப் பெண்ணை இயேசு பாராட்டுகின்றார். ஏனெனில், அப்பெண் நமது நம்பிக்கை, விடாமுயற்சி மற்றும் செபவாழ்விற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறார்.
நாமும் அந்தப் பெண்ணைப் போன்று செபத்தில், நம்பிக்கையில் வேரூண்ற வேண்டும்.
பிற சமயத்தவர்கள் மீது நமது எண்ணங்களும், பார்வைகளும் என்ன?
கிறிஸ்துவைப் போன்று பிறரையும் அன்பு செய்து வாழ்வோம். இறைநம்பிக்கையில் வேரூண்றுவோம்.
- அருட்பணி. அமல ஞான பிரபு, மதுரை.
Comments