நமது பொறுப்புகளின் வழியாய் கடவுளின் நம்பிக்கையாளராய் மாறுவோம்.
இன்றைய நற்செய்தியில், ஆண்டவர் இயேசு தன்னுடைய பாடுகள், இறப்பு மற்றும் உயிர்ப்பை பற்றி மீண்டும் அறிவிக்கிறார். இவ்வாறு மீண்டும் அறிவிப்பதன் மூலம் தன்னுடைய சீடர்களை தயார் படுத்துகிறார். இயேசுவின் சீடர்கள், இயேசு செய்த புதுமைகளை கண்டு அவருடைய மாட்சியிலும், அரசாட்சியிலும் எவ்வித துயரின்றி பங்குபெற விரும்பினர். அதனால், இயேசுவின் துயரங்களை ஏற்றுக்கொள்ளத் தயாராகவில்லை. எனவே, இயேசு மீண்டும் தன்னுடைய பாடுகளை முன்னறிவிப்பதன் வழியாக தன்னடைய சீடர்களைத் சோதணைகள், துயரங்களைச் சந்திப்பதற்கும், அதன் வழியாக மீட்பை கண்டடையத் தயார்படுத்துகின்றார்.
இன்றைய நற்செய்தியின் இரண்டாம் பகுதியில், கோவில் வரியாக இரண்டு திராக்மா செலுத்தக்கூடிய நிகழ்வை பார்க்கிறோம். விடுதலைப்பயணம் 30: 11-16 பகுதியை வாசிக்கும் போது, ஒருவர் தன்னுடைய உயிருக்கு ஈட்டுத்தொகை செலுத்த வேண்டும் என்பது கட்டளை. பாவத்திற்கு கழுவாயாகவும் செலுத்துபடும். ஈட்டுத்தொகை செலுத்தாத மனிதனுடைய பாவங்கள் மன்னிக்கப்படாது. அவர் தன்டனைக்குள்ளாவர். அத்தொகை செலுத்தாதோர் இஸ்ரேயல் என்ற வாரிசு உரிமை இழந்துவிடுவார்.
நமக்கு ஒரு கேள்வி எழலாம். இயேசு எதற்காக வரி செலுத்த வேண்டும்? அவர் கடவுளின் மகன் அல்லவா? இறைமகன் இயேசு பாவமற்றவர். அவருக்குப் பிணைத்தொகை செலுத்த வேண்டும் என்ற தேவையில்லை. மாறாக வரி செலுத்துவதன் மூலம் நமக்கு ஒரு பாடத்தை கற்றுத் தருகிறார். ஒரு நாட்டின் குடிமக்களாக இருக்கக்கூடியவர்கள் அல்லது தான் சார்ந்து இருக்கக்கூடிய ஆலயத்திற்கு தான் ஆற்ற வேண்டிய கடமைகளை, பொறுப்புகளை முறையாகப் பின்பற்றி அதை நிறைவேற்ற வேண்டும். தன்னுடைய பொறுப்புகளில், கடமைகளில் தவறி நம்பிக்கையற்று இருந்தால் அவர் எப்படி இறையாட்சியில் நம்பிக்கைக்கு உரியவராக இருக்க முடியும். நாம் நம்முடைய சிறிய பொறுப்புகள், செயல்பாடுகளில் தவறாது வாழ்கின்ற பொழுது, கடவுளின் நம்பிக்கைக்கு உரிய மனிதர்களாக மாறமுடியும். எனவே தான் ஆண்டவர் இயேசு பேதுருவிடம் கடலுக்குச் சென்று தூண்டில் போட்டு முதலில் அகப்படும் மீனின் வாயில் ஸ்தாத்தோர் எனப்படும் நாணணயத்தைக் காண்பாய் அதை தனக்கும் சீடர்களுக்கும் வரியாகச் செலுத்த சொல்கிறார். அதாவது அகப்படும் மீனை விற்று அதன் வழியாகப் பெறப்படும் பணத்தை வரியாகச் செலுத்த சொல்கிறார். நாம் நமக்குரிய கடமைகளை, பொறுப்புகளை சரியாக நிறைவேற்றுகிறோமா? சிந்தித்ர்ப்பார்ப்போம்.
- அருட்பணி. அமல ஞான பிரபு, மதுரை.
Comments