அன்னை மரியாளின் விண்ணேற்பு பெருவிழா
இன்று நாம் அன்னை மரியாளின் விண்ணேற்பு பெருவிழாவை கொண்டாடுகிறோம். நமது கத்தோலிக்கத் திருஅவையில் பாரம்பரியமாக இவிவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அன்னை மரியாளின் இறப்பிற்கு பிறகு, அவர் உடலோடும், ஆன்மாவோடும் விண்ணகத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுவார் என்று வானதூதர் அன்னைக்கு காட்சியின் வழியாக வெளிப்படுத்துகின்றார். அதன்படியே அன்னை மரியாள், இறைவனின் தாய், அவரது இறப்பிற்கு பிறகு உடலோடும், ஆன்மாவோடும் விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார். அதனைத் தொடர்ந்து கத்தோலிக்க மரபு நிகழ்வுகள் வழியாக இவ்வுண்மை உறுதிபடுத்தப்படுகிறது. மூன்றாம் நூற்றான்டு தொடங்கி இந்நம்பிக்கை விழாவாக கொண்டாடப்படுகிறது. இறுதியாக 1950 ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி அன்னை மரியாள் விண்ணகத்திற்கு உடலோடும், ஆன்மாவோடும் எடுத்துக் கொள்ளப்பட்டார் என்ற உண்மையை விசுவாசப் பிரகடனமாக திருத்தந்தை 12ம் பத்திநாதர் அதிகாரப் பூர்வமாக அறிவித்தார். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15ம் தேதி இவ்விழாவை சிறப்பாக நாம் கொண்டாடி வருகின்றோம்.
பழைய ஏற்பாட்டில் ஏனோக்கு மற்றும் எலியா ஆகிய இருவர் மட்டுமே உடலோடு விண்ணகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டனர். ஏனெனில் அவர்கள் வாழ்வு கடவுளுக்கு உகந்ததாக இருந்தது. அன்னை மரியாள் பாவம் ஏதுமின்றி மாசற்றவராக, தூயவராக கருவிலே தேர்ந்து கொள்ளப்பட்டார். கடவுளால் தேர்ந்து கொள்ளப்பட்டதற்கு ஏற்ப உண்மையாக வாழ்ந்தார். அதனால் தான் கபிரியேல் தூதர் அன்னை மரியாளை “அருள் மிகப் பெற்றவர்” (லூக்கா 1:28) என வாழ்த்துகிறார். மேலும் “கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் தாயும், சகோதரரும், சகோதரியும் ஆவார்” (மாற்கு 3:35) என்று இயேசு குறிப்பிடுவதன் மூலம் அன்னை மரியாள் இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்ந்தார் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. இதற்குப் பரிசாக இறைவன் அவருக்கு விண்ணேற்ப்பை வழங்குகிறார்.
இன்றைய வாசகங்களின் அடிப்படையில் சிந்திக்கின்ற பொழுது, ஒரு மனிதரின் வழியாக இவ்வுலகில் பாவம் நுழைந்தது. ஆனால் இயேசு கிறஸ்து தனது இறப்பின் வழியாக கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றி பாவத்தை முற்றிலுமாக அழித்தார். கிறிஸ்து என்ற ஒருவரது உயிர்ப்பின் வழியாக, இறந்த ஒவ்வொருவரையும் கடவுள் உயிர்த்தெழச் செய்தார். ஆம். கிறிஸ்து வழியாக அன்னை மரியாள் உயிர்ப்பை விண்ணேற்பை கொடையாகப் பெறுகிறார். கடவுளின் தாய் என்ற நிலையில் அதைக் கொடையாகப் பெற்றாலும், அன்னை மரியாள் தனது வாழ்வின் மூலமாக அதை நிறைவாகப் பெற்றார்.
தான் கருவுற்ற சூழலிலும் கூட எலிசபெத்திற்கு உதவி செய்திட விரைந்து சென்றார். அவருடைய பேறு காலம் வரை அன்போடு உதவிகள் பல செய்தார். “அருள் மிகப் பெற்றவர்”(லூக்கா 1: 28) “இதோ கருவுற்று ஒரு மகனைப் பெற்றெடுப்பீர். அவருக்கு இயேசு என்று பெயரிடுவீர்”(லூக்கா 1:31) என்று கபிரியேல் தூதர் வாழ்த்திய பொழுது தன்னை தாழ்த்தி “நான் ஆண்டவரின் அடிமை. உமது சொற்படியே எனக்கு நிகழட்டுமம்”(லூக்கா 1:38) என்று தாழ்ச்சி நிறைந்த உள்ளத்துடன் வாழந்தவர் அன்னை மரியா. தனது மகன் இயேசுவை, உலகின் மீட்பிற்காக கையளித்த அந்த மாபெரும் தியாக உள்ளம். இதற்குப் பலனாக அன்னை மரியாளுக்கு விண்ணேற்பை கடவுள் கொடையாக வழங்கினார். நாமும் தாழ்ச்சி நிறைந்த உள்ளத்துடன் இறைவனுக்கு முழுமையாக அன்னை மரியாளைப் போன்று அர்ப்பணித்து, பிறருக்கு நன்மைகள் செய்து, தூய வாழ்வை மேற்கொள்ளும் போது, அடிமைத் தளையாகிய சாவை வென்று உயிர்ப்பை, விண்ணேற்பை கொடையாகப் பெற்றுக் கொள்ளமுடியும்.
அன்னை மரியின் வழியாய் இறைவன் நம் ஒவ்வொருவரையும் நிறைவாய் ஆசீர் வதிப்பாராக.
- அருடபணி. அமல ஞான பிரபு, மதுரை.
Comments