உயர்ந்த காணிக்கை!
தன்னை முழுமையாக வழங்குதலே உயர்ந்த காணிக்கை.
ஆண்டின் பொதுக்காலம் 32ஆம் ஞாயிறு
1 அரசர்கள் 17:10-16
எபிரேயர் 9:24-28
மாற்கு 12:38-44
இறைமகன் இயேசு கிறிஸ்துவின் பெயரால் வாழ்த்துகளும், செபங்களும்.
இன்றைய இறைவாக்குப் பகுதிகள் இரண்டு கைம்பெண்கள் பற்றி கூறுகிறது. ஒருவர் சாரிபாத் நகரைச் சார்ந்த கைம்பெண். தனது மகனுடன் வாழ்ந்து வருகிறார். மற்றொருவர், இன்றைய நற்செய்தியில் வருகின்ற கைம்பெண். இருவரும் வாழ்வில் அனைத்தையும் இழந்தவர்கள். இருவரையும் தங்களது காலத்தில் வாழ்ந்த சிறந்தவர்களால் வாழ்த்தப்படுகிறார்கள், அவர்கள் வாழ்க்கை பிறருக்கு எடுத்துக்காட்டாக மாறுகிறது. ஏனெனில், அவர்கள் பகிர்தலில், வழங்;குதலில் உயர்ந்த உள்ளம் படைத்தவர்கள்.
இன்றைய முதல் வாசகத்தின் வரலாற்றுப் பின்னனியைப் பார்க்கின்றபோது, மக்கள் பஞ்சத்தால் துயரப்படுகிறார்கள். எதற்காகப் பஞ்சம்? இஸ்ரேயலை ஆட்சி செய்த ஆகாபு காலத்தில் யாவே கடவுளை வழிபடாமல் வேற்றுத் தெய்வங்களை வழிபடுகிறார்கள். மக்களை முறைப் படுத்த வேண்டிய அரசனும் மக்களோடு இணைந்து பல தெய்வ வழிபாட்டில் ஈடுபடுகின்றான். மக்களின் தவறை தண்டிக்கும் விதமாக இறைவன் அந்நாட்டில் பஞ்சத்தை வரச்செய்கிறார். இந்நிலையில் சாரிபாத்திற்கு வரும் இறைவாக்கினர் எலியா. தான் சந்திக்கும் பெண்ணிடம் உணவு கேட்கின்றார். அப்பெண் காட்டில் கிடைக்கக்கூடிய சுள்ளிகளைப் பொறுக்கி, வீட்டில் கடைசியாக இருக்கக் கூடிய மாவை வைத்து ரொட்டித்துண்டுகளைத் தயாரித்து சாப்பிட நினை;க்கிறார். அது மட்டுமே அவரிடம் இருந்த உணவுப் பொருள். இiறாக்கினார் எலியாவிடம் தனது நிலையைப் பற்றி கூறுகிறார். இருப்பினும், எலியா தனக்கு முதலில் உணவு கேட்கின்ற பொழுது. மனநிறைவோடு அவருக்கு வழங்குகின்றார்.
இன்றைய நற்செய்தியில் ஆண்டவர் இயேசு எருசலேம் ஆலயத்தில் காணிக்கை செலுத்தும் மனிதர்களைப் பார்த்துக் கொண்டு இருக்கிறார். அவர்களில் மற்றவர்களைக் காட்டிலும் குறைவாக இரண்டு செப்புக் காசுகளை இறைவனுக்கு காணிக்கையாக வழங்கிய கைம்பெண்ணை இயேசு போற்றுகிறார். ஏனெனில் தன்னிடம் இருந்த அனைத்தையும் முழுமையாக இறைவனுக்கு வழங்கினார். யூத சமுகத்தில் விதவைகளின் வாழ்க்கை துயரமான ஒன்றாகும். அவர்களுடைய சொத்துக்களை, உறவினர்கள் அபகரித்து கொள்வார்கள். அவர்களுக்காக நீதியைப் பெற்றுத் தருகின்றோம் என்று சொல்லி நீதிபதிகளும் அவர்களுடைய சொத்துக்களை அபகரித்தனர். இதை நாம் ஆண்டவர் இயேசு சொல்லக்கூடிய “விதவையும் பொறுப்பற்ற நீதித் தலைவரும்” என்ற உவமையின் வழியாக அறிந்து கொள்ள முடியும்.
அந்நியர்கள், அநாதைகள், மற்றும் விதவைகள் ஆகியோரின் உரிமைகள் பாதுகப்பட வேண்டும் என்பது இறைவனின் சட்டம் ஆகும். இதை இணைச்சட்டம் 14:19 உறுதிபடுத்துகிறது.
இந்த இரண்டு பெண்கள் எதற்காக சிறப்புறுகின்றனர்.
சாரிபாத்தைச் சார்ந்த பெண், முதலாவதாக, எலியாவின் கடவுளை வாழும் கடவுளாக ஏற்றுக் கொள்கிறார்.
இரண்டாவதக, வாழும் கடவுளாகிய யாவே இறைவன் மீது நம்பிக்கை கொள்கிறார்
இறுதியாக, தன்னிடம் இறுதியாக இருந்த உணவை எவ்வித தயக்கம் இன்றி முழுமையாக வழங்குகிறார்.
இந்த உயரிய பண்பினால், மழைபொழிந்து பஞ்சம் ஓயும் வரை அவரது வீட்டில் உணவிற்கு குறைவிருக்காது என்று எலியாவின் கூற்று உண்மையாகிறது, அங்கே புதுமை நிகழ்கிறது.
நற்செய்தியில். மற்றவர்கள் அனைவரும் தன்னிடம் இருந்தவற்றில் சிலவற்றை பெருமைக்காக கொடுக்கக் கூடிய நிலையில், வாழ்விற்கு அடுத்த வேளைக்கு எதுவுமில்லை என்ற சூழலில் இறைவனுக்கு தன்னிடமிருந்த இரண்டு செப்புக்காசுகளையும் முழுமையாக வழங்குகிறார் கைம்பெண். மனிதரின் பார்வையில் குறைவு, ஆனால் இறைவனின் பார்வையில் மிகப் பெரியது. மற்றவர்கள் தங்களிடம் உள்ளவற்றைத் தந்தனர். ஆனால் ஏழைக் கைம்பெண்ணோ தன்னிடம் உள்ள அனைத்தையும், தனது உள்ளத்தையும் இறைவனுக்குத் தந்தார்.
இறைவனுக்கு கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் அனைத்தையும் முழுமையாக வழங்க வேண்டும். இதைத்தான், இன்றைய இரண்டாம் வாசகம் எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடல் அழகாக விளக்குகிறது. தலைமைக்குருக்கள் மக்களின் பாவத்திற்காக ஆடுகளை பலியாக ஒப்புக் கொடுத்தனர் ஆனால், ஆண்டவர் இயேசுக்கிறஸ்து நம் ஒவ்வொருவருடைய மீட்புக்காகத் தன்னையே பலியாக முழுமையாகத் தந்தார். அத்தகைய முழுமையான அர்ப்பணத்தை, தன்னையே முழுமையாக தருவதுதான் உண்மையான காணிக்கை. அதைத்தான் இறைவன் நம்மிடம் விரும்புகின்றார்.
பெறுதலைவிட தருவதே சிறந்த உள்ளம். சிறந்த வாழ்வு.
பெறுவதில் அல்ல, தன்னை முழுமையாக வழங்குதலே உயர்ந்த காணிக்கை.
அருட்பணி. அமல ஞான பிரபு, மதுரை.
Comments