சிலுவை நம் வாழ்வின் மறுபக்கம்!
இறை நம்பிக்கையாளர்கள் சரியானவற்றைத் தேர்ந்து கொள்ளவும், தேர்ந்து கொண்ட வாழ்வில் நிலைத்திருக்கவும், தேர்ந்து கொண்ட நம்பிக்கையை செயல்களில் வெளிப்படுத்தவும் இறைவன் நமக்கு அழைப்புவிடுக்கிறார்.
இன்றைய முதல் வாசகத்தில் துன்புறும் ஊழியன் பற்றி எடுத்துரைக்கிறார் இறைவாக்கினர் எசாயா. பாபிலோனிய அடிமைத்தனத்திலிருந்து பாரசீக மன்னன் சைரசு அவரால் விடுவிக்கப்பட்ட யூத மக்கள் தங்களுடைய சொந்த ஊருக்குத் திரும்புகிறார்கள். அவர்களுடைய எருசலேம் நகரம் நிலைகுலைந்து கிடக்கின்றது. எனவே எருசலேம் நகரையும், கோவிலையும் சீர்செய்ய விரும்புகின்றார்கள். இந்நிலையில் ஒரு குழுவினர் கடவுளின் மீது நம்பிக்கையற்றவர்களாய் பாரசீக அரசோடு இணைந்து ஆலயத்தை கட்டுவது என்று எண்ணம் கொண்டார்கள். ஏனெனில் கடவுள் தாம் தங்களை எதிரிகளிடம் ஒப்புவித்தார் என்று கடவுளுக்கு எதிராக முனுமுனுத்தார்கள். கடவுளுக்கு எதிராக செயல்பட்டார்கள்.
மற்றவர்களே, கடவுளின் வழியை பின்பற்றி அவருக்கு உகந்தவர்களாக வாழ்வது என்று தீர்க்கமாக வாழ்ந்தார்கள். அதாவது, பாரசீகத்தையும், அதனுடைய வழிபாடுகளையும் விட்டுவிட்டு, கடவுளையும் அவரது திருச்சட்டங்களை பின்பற்றி வாழ்வது. இதன் விளைவாக, அக்குழுவின் தலைவர் அல்லது இறைவாக்கினர் பல்வேறு துயரத்திற்கு உட்படுத்தப்பட்டார். ஆயினும், கடவுள் மீது கொண்ட நம்பிக்கை மற்றும் அர்பணத்தில் அவர் உறுதியாய் நிலைத்து இருந்தார்.
இன்றைய நற்செய்தியில் ஆண்டவர் இயேசு “என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றபற்றட்டும்”(மாற்கு 8:34) என்று அழைப்புவிடுக்கிறார். எதற்காக இயேசு துண்பத்தைப் பற்றிக் கூறுகிறார்?
மக்கள் பார்வையில் இயேசு யார்? என்ற கேள்வியை முன்வைக்கின்ற பொழுது, இயேசு ஓர் இறைவாக்கினராகப் பார்க்கப்படுகிறார். ஆனால் சீடர்களின் பார்வையில், இயேசு முன்னறிவிகப்பட்ட, மக்கள் எதிர்பார்த்து காத்திருந்த மெசியா. சீடர்கள் இந்த மெசியாவாகிய இயேசுவை உரோமையரிடமிருந்து அரசியல் விடுதலையை மட்டும் பெற்றுத் தருகின்ற அரசியல் மெசியாவாக மட்டும் பார்த்தார்கள்.
ஆனால், இயேசு அரசியல் விடுதலையையும் கடந்து, ஆன்மீகம், அகம், முடிவில்லா வாழ்வு என்று அனைத்தையும் உள்ளடக்கிய உண்மையின் விடுதலையை முன்வைக்கின்றார். இந்த முழு விடுதலையைப் பெறுவதற்கு துண்பம் என்ற சிலுவையை ஏற்றுக் கொள்ள வேண்டும், என்ற உண்மையை விவரிக்கின்ற பொழுது சீடர்கள் அதை ஏற்றுக் கொள்ளத் தயங்குகின்றார்கள். இயேசு மனித குலத்தின் மீட்பிற்கு மானிட மகன் துண்பத்திற்கு உட்பட வேண்டும், சாவை ஏற்றுக் கொள்ள வேண்டும், என்கின்ற பொழுது சீடர்கள் இயேசுவை கடிந்து கொள்கிறார்கள். எதாரத்த வாழ்வை நாம் பார்கின்ற பொழுது, மேன்மை மிக்க ஒன்றை நாம் அடைய வேண்டுமெனில் சிறுமையானவ பலவற்றை நாம் இழக்க வேண்டும். இழப்புகள் இன்றி மகிழ்ச்சியும், வாழ்வும் நிலை பெறுவதில்லை.
நம்முடைய வாழ்வில் நாம் தேர்ந்து கொண்ட வாழ்வு, கொள்கை, நம்பிக்கை இவற்றைப் பின்பற்றுகின்ற பொழுது வரும் துயரங்கள் கண்டு துவண்டு விடக் கூடாது. போராட்டங்கள் இன்றி மனித உரிமைகளும், விடுதலையும் கிடைப்பதில்லை. தனக்கு துயரம் வந்த பொழுதும், மக்களால் அவமானப் படுத்தப்பட்டபோதும், சாவிற்கு உள்ளான போதும் கொண்ட கொள்கையில், நம்பிக்iயில் இயேசு நிலைத்திருந்ததைப் போன்று, நாமும் நிலைத்திருப்போம்.
மனித பார்வையில் சிலுவைக்கு ஆயிரம் அர்த்தங்கள் – அவமானம், துயரம், வெறுமை, கைவிடப்பட்ட நிலை, வெறுப்பு, இறப்பு, ஒன்றுமில்லாமை…..
ஆனால், கடவுளின் பார்வையில் சிலுவை – வாழ்வு மட்டுமே.
இறுதியாக, திருத்தூதர் யாக்கோபு நம்மிடம் முன்வைக்கக்கூடியது ஒன்று. கிறிஸ்துவை, தேர்ந்து கொண்ட நமது நம்பிக்கை நிலைத்திருக்க வேண்டும். அந்த நம்பிக்கை வார்த்தைகளால் அல்ல, மாறாக செயல்களால் அந்த நம்பிக்கையை அழகு படுத்தவேண்டும். இல்லையென்றால் நமது நம்பிக்கை உயிரற்ற உடலைப் போன்றதாகி விடும். நாம் எதைத் தேர்ந்து கொள்ளப் போகிறோம்?
நம் வாழ்வின் மறுபக்கம்!
Fr. JESURAJ Amala Gnana Prabhu, Madurai
Mission Etrangeres de Paris
128 rue du Bac
75341 Paris cedex 07
Comments