பேறுபெற்றவர் நம் தாய் அன்னை மரியாள்!



இன்று நமக்கு மகிழ்சியான நாள். நமது பாதுகாவலியும், தாயுமான அன்னை மரியாளின் பிறப்பு விழாவை சிறப்பாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாடும் நாள். அன்னை மரியாளின் பரிந்துரையாள் இறைவனிடமிருந்து பெற்ற நன்மைகளுக்கு நன்றி செலுத்தும் நாள். மதங்களை கடந்து அனைத்து மக்களும் சங்கமித்து, அன்னைக்கு வேளாங்கண்ணியில் நன்றி செலுத்துவது இன்றைய நாளின் சிறப்பு. 

மாசற்றவரும், எப்பொழும் கன்னியும், தூயவருமான அன்னை மரியாளின் பிறப்பு விழாவை கொண்டாடும் இந்நாளில் அவரைப் போன்று அருள் மிகப் பெற்றவராக, பேறுபெற்றவராக வாழ இறைவன் நமக்கு அன்னையின் வழியாக அழைப்பு விடுக்கிறார். 

விவிலியத்தில் 3 இடங்களில் அன்னை மரியாள் பேறுபெற்வர் என்று போற்றப்படுகிறார்.

முதலாவதாக, எலிசெபெத்தம்மாள் “பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்” (லூக்கா 1:42) வாழ்த்துகின்றார். அதனைத் தொடர்ந்து “ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்” (லூக்கா 1:45) என்று மரியாளை போற்றுகின்றார். கபிரியேல் தூதர் இறைவனின் வார்த்தையை அறிவித்த பொழுது அன்னை மரியாள் அந்த இறைவார்த்தையிலும், இறைவனிலும் நம்பிக்கை கொண்டார். எனவே, அந்த நம்பிக்கையின் பரிசாக இறைமகன் இயேசு அன்னை மரியின் வழியாக நமக்கு மீட்பராக பிறக்க இறைவன் அருள் புரிந்தார். “என் காலடிக்கு உம் வாக்கே விளக்கு! என் பாதைக்கு ஒளியும் அதுவே!” (திருப்பாடல் 119:105). ஆம், இறைவார்த்தை நம்மை ஒளியின் விளக்காக நம் வாழ்வை மேம்படுத்தும். அதில் நம்பிக்கை வைக்கின்றபோது நாம் வாழ்வு பெறுவோம்.

இரண்டாவதாக, எல்லாத் தலைமுறையினரும் மரியாளை பேறுபெற்றவர் எனப் போற்றுகின்றனர். “இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர்” (லூக்கா 1:48) எதற்காக? “ஏனெனில் வல்வராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார்.தூயவர் என்பதே அவரது பெயர்” (லூக்கா 1:49). அரும்பெரும் செயல்கள் செய்த இறைவனை உளமாரப் போற்றி நன்றி செலுத்தினார் அன்னை மரியாள். நன்றி நிறைந்த உள்ளத்துடன் வாழ்வதால் எல்லாத் தலைமுறையினரும் மரியாளைப் போற்றுகின்றனர். அவரைப் போன்று, நாமும் நமது வாழ்வில் இறைவன் செய்த அரும்பெரும் செயல்களை நினைத்து நன்றி செலுத்துவோம். 

மூன்றாவதாக, இயேசு இறைவார்த்தையை மக்களுக்கு அறிவித்துக் கொண்டிருந்தபோது, கூட்டத்திலிருந்த பெண் ஒருவர், “உம்மைக் கருத்தாங்கிப் பாலூட்டி வளர்த்த உம் தாய் பேறுபெற்றவர்,” (லூக்கா 11:27) என்று வாழ்த்துகின்றார். இறைமகன் இயேசுவைப் பெற்றெடுத்ததனால் மட்டுமல்ல மாறாக இறைவார்த்தையின் படி வாழந்த காரணத்தினால் அன்னை மரியாள் பேறுபெற்றவர் ஆகிறார். அப்பெண்ணின் சான்று உண்மை என்பதை இயேசு உறுதிபடுத்துகிறார். “இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் இன்னும் அதிகம் பேறுபெற்றவர்” (லூக்கா 11:28) என்று தனது தாய் அன்னை மரியாளை இயேசுவும் போற்றுகிறார். 

நாமும் அன்னை மரியாளைப் போன்று இறைவனின் வார்த்தையில் நம்பிக்கை கொண்டு, இறைவன் செய்த நன்மைகளுக்கு, அரும் பெரும் செயல்களுக்கு எந்நாளும் நன்றி சொல்வோம். அன்னை மரியாளைப் போன்று இறைவார்த்தைக்கு ஏற்ப வாழுவோம். அன்னை மரியாள் வழியாக இறைவன் நம் ஒவ்வொருவரையும், நாம் வாழுமு; உலகத்தையும் நிறைவாக ஆசீர்வதிப்பாராக!

அனைவருக்கும் அன்னை மரியாளின் பிறப்பு விழா நல்வாழ்த்துக்கள். 

- அருட்பணி. அமல ஞான பிரபு, மதுரை. 


Comments

Popular posts from this blog

உயர்ந்த காணிக்கை!

New Evangelization for the Transmission of Christian Faith in Asia

The Journey of Irom Sharmilaand Meira Paibee Movement