யார் பெரியவர்?


பொதுக்காலம் 25ஆம் ஞாயிறு – 23, செப்டம்பர் 2018

முதல் வாசகம்: சாலமோனின் ஞான நூல் 2: 12, 17-20
இரண்டாம் வாசகம்: யாக்கோபு 3: 16-4:3
நற்செய்தி வாசகம்: மாற்கு 9: 30-37

1976ல் அமெரிக்க நாட்டின் வாஸிங்டன் நகரில், மனவளர்சி குன்றியவர்களுக்கான சிறப்பு ஒலிம்பிகஸ் போட்டி நடைபெற்றது. ஓட்டப் பந்தயப் போட்டியில் கலந்து கொண்டவர்களின் செயல் அனைவரின் உள்ளத்தை கவர்ந்தது. போட்டி துவங்கிய சில வினாடியில் ஒருவர் தடுமாறி கீழே விழுகழன்றார். போட்டியில் பங்கேற்ற மற்றவர்கள் தங்களுடைய ஓட்டத்தை நிறுத்தி விட்டு, கீழே விழுந்த நபரை கைகொடுத்து எழுப்பி, அனைவரும் தங்களுடைய கரங்களை ஒன்று சேர்த்து, ஒன்று சேர போட்டியின் எல்லையை கடந்தனர். இந்த நிகழ்வை குறிப்பிட்டு வெளிவந்த பத்திக்கை செய்தி ஒரு கேள்வியை முன்வைத்தது. யார் மனவளர்ச்சி குன்றியவர்கள்? அவர்களா? நாமா? 

அவர்கள் இல்லை. நிச்சயமாக நாம் தான். ஏனெனில் நம்முடைய உள்ளம் தான் தீமையினால், போட்டியினால், பொறாமையினால், அதிகாரத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே நாம் தான் மனவளர்ச்சி குன்றியவர்கள்.  
யார் பெரியவர்? இந்த கேள்விக்கான விடையை அறிந்தும், உண்மையை உணராமல் தொடர்ந்து வாழ்வதுதான் மனிதனின் அறியாமை. 

கடவுள் உலகைப் படைத்த பிறகு, மனிதர்களுக்கு முழு சுதந்திரத்தையும் வழங்கினார். இருப்பினும் சாத்தானின் சூழ்ச்சிக்கு உள்ளாகி இறைவனின் அருளையும், அவர் வழங்கிய சுதந்திரத்தையும் இழந்தனர். உலகில் வாழும் அனைவருக்கும் முதல் தாயான ஏவாள், தந்தையான ஆதாம் இருவரும் விலக்கப்பட்ட கனியை உண்டதால் மட்டுமல்ல, மாறாக “நீங்களும் கடவுளைப் போல நன்மை, தீமைகளை அறிவீர்கள்”(தொடக்கநூல் 3:5) என்ற மாய வார்த்தையினால் ஈர்க்கப்பட்டு, தாங்களும் கடவுளைப் போன்று மாற வேண்டும், அவரைவிடப் பெரியவராக மாறவேண்டும் என்ற உள்ளுணர்வே அவர்களின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது. 

முதல் பெற்றோர் மட்டுமல்ல, காயீன்-ஆபேல்: ஈசாக்கு-யாக்கோபு: யோசேப்பு-அவரது சகோதரர்கள்: இஸ்ரேயல் மக்கள்-பாரவோன் மன்னன்: சவுல்-தாவீது: இறைவழிபாட்டாளர்கள்-பிற தெய்வ வழிபாட்டாளர்கள்: திருச்சட்டம்- பிற நாட்டுச்சட்டம் என்று விவிலிய வரலாற்றை வாசிக்கும்போது அறிந்து கொள்ள முடியும். யார் பெரியவர்? என்ற உள்ளுணர்வால் வீழ்ந்தவர்கள் ஏராளம். இதைத்தான் இன்றைய வாசகங்கள் நமக்கு உணர்த்துகின்றன. 

இன்றைய முதல் வாசகம் சாலமோனின் ஞான நூல் அழகாக விளக்குகிறது. கிரேக்க நகரம் அலெக்ஸாந்திரியாவில் வாழ்ந்த யூதர்கள் திருச்சட்டத்தை பின்பற்றாமல், கிரேக்கச் சட்டத்தை பின்பற்றுகிறார்கள். ஏனெனில் கிறிஸ்துவின் வருகைக்கு முன்பே கிரேக்க நாடு அறிவிலும், இலக்கியத்திலும், கலையிலும் சிறந்து விளங்கியது. எனவே இதனைப் பின்பற்றிய கிரேக்கத்தில் வாழ்ந்த யூதர்கள் திருச்சட்டம் பயனற்றதாகக் கருதினர். மேலும் திருச்சட்டத்தை பின்பற்றும் யூதர்கள், இறைவழிபாட்டாளர்கள், இறைநம்பிக்கையாளர்களை விட தாங்கள் உயர்ந்தவர்களாக கருதினர். எனவேதான் பொல்லாதவர்கள், “நீதிமான்களுடைய சொற்கள் உண்மையானவையா” நீதிமான்கள் கடவுளின் மக்கள் என்றால், அவர் அவர்களுக்கு உதவி செய்வார்” என்று கடவுளுக்கு எதிராக யார் பெரியவர்? என்று தங்களை நிலை நிறுத்தப் பார்க்கின்றனர். 

யார் பெரியவர்? என்ற மனித உள்ளுணர்வு தான் பிறரிடத்தில் அன்பு கொள்வதற்கு பதிலாக, பொறாமையும், கட்சி மனப்பான்மையும் உருவாக்குகின்றது. இதன் விளைவாக நம்முடைய வேண்டுதல்கள் கேட்கப்படுவதில்லை. ஏனெனில் நம்முடைய உள்ளம் தீமையாள் ஆட்கொள்ளப்பட்டுள்ளது. இந்ந உள்ளுணர்வு மேலோங்குவதற்கு அடிப்படை நம்மிடம் உள்ள சிற்றின்பமே காரணம் என்று சாடுகிறார் திருத்தூதர் யாக்கோபு இன்றைய இரண்டாம் வாசகத்தில்.

நற்செய்தியில் ஆண்டவர் இயேசு, தன்னுடைய பாடுகள் மற்றும் இறப்பை பற்றி அறிவிக்கும் பொழுது சீடரகள் அதைப்பற்றி கவலை கொள்ளவில்லை. மாறாக தங்களுள் யார் பெரியவர்? என்பதில்தான் கவலை கொள்கிறார்கள். எதற்காக, என்று சிந்திக்கும் பொழுது பின்வரும் நிகழ்வுகள் காரணமாக இருக்கலாம். 

1. சீடர்கள், இயேசுவை அரசியல் மெசியாவாகப் பார்த்தார்கள். எனவேதான்; “நீர் மாட்சியுன் வரும்பொழுது ஒருவர் உமது வலப்புறமும் மற்றொருவர் இடப்புறம் அமர வேண்டும்” என்று யோவான், யாக்கோபின் தாயார் வேண்டுகோள் வைக்கிறார். இதனால் மற்ற சீடர்கள் கோபம் கொள்கின்றனர். 

2. இயேசுவின் முக்கியமான நிகழ்வுகளில் எல்லாம் தன்னுடன் திருத்தூதர்கள் பேதுரு, யோவான், யாக்கோபு ஆகிய மூவரையும் மட்டும் அழைத்துச் செல்கின்றார். இது மற்றச் சீடர்களுக்கு பொறாமையையும், சினத்தையும் உருவாக்கியிருக்கலாம்.  

3. இன்றைய நற்செய்தியில் பார்க்கின்றபோது இயேசு கலிலேயா வழியாகச் செல்கின்றார். இயேசுவின் சீடர்கள் பெரும்பாலும் கலிலேயா பகுதியைச் சார்ந்தவர்கள். எனவே, மக்கள் மத்தியில் இயேசுவிற்கு தாம் தான் மிகவும் நெருக்கமான சீடர் என்று ஒவ்வொரும் காட்ட முற்படுகின்றனர்.

இதன் விளைவாக அவர்களிடையே யார் பெரியவர்? என்ற கட்சி மனப்பான்மையும், போட்டியும் உருவாகிறது. 

இயேசுவின் சிலுவை வழியை பின்பற்றாமல், மாறாக அதிகாரம் சார்ந்த பாதையை சீடர்கள் தேர்வு செய்ய முற்படும் பொழுது, அவர், அவர்களை கடிந்து கொண்டு, அவர்களுக்கு அறிவுரை வழங்குகிறார். முதன்மையானோர் கடைசியானவராக, பணிபெறுபவராக அன்று, பணிபுரிபவராக, குழந்தையைப் போன்று மனம் படைத்தவராக, அணைவருக்கும் தன்னை அர்பணம் செய்யக்கூடிய மனிதர்களாக மாற இயேசு அழைப்பு விடுக்கிறார். 

நம்மிடையே உள்ள உள்ளுணர்வாகிய, சிற்றின்பத்திற்கு இடம் தரக்கூடிய அதிகாரம், கட்சி மனப்பான்மை, போட்டி, தன்னலம் இவற்றை விடுத்து: பிறர் நலம் சார்ந்து, அனைவருக்கும், இறைவனக்கும் பணிபுரிய, பணியாளர்களாய் வாழ்வோம். 

இறைவன் நம் ஒவ்வொருவரையும் நிறைவாக ஆசீர்வதிப்பாராக! 


அருட்பணி. அமல ஞான பிரபு, மதுரை






Comments

Popular posts from this blog

The Journey of Irom Sharmilaand Meira Paibee Movement