பேதமையை விட்டுவிடுங்கள், ஞானத்தைப் பின்பபற்றுங்கள்.
இன்றைய மூன்று வாசகங்கள் நமக்கு கற்றுத் தரும் பாடம்: ஞானத்தைப் பின்பற்றுங்கள் வாழ்வு பெறுவீர்கள். நீதிமொழிகள் 9: 10 கூறுகிறது, “ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே ஞானத்தின் தொடக்கம்.” “அதாவது மெய்யுனர்வே ஞானம்.” இணைச்சட்ட நூல் 4ல் பார்க்கும் பொழுது ஆண்டவரின் திருச்சட்டத்தை கடைப்பிடித்தலே ஞானம். எபிரேய விவிலியப் பின்புலத்தில் பார்க்கின்றபோது ஞானம் என்பது சிறந்த கைவேலைப்பாடு. அதாவது சிந்திக்கும் திறன் உடைய மனிதர் தன்னுடைய அறிவை நன்கு பயன்படுத்தி அதன் வழியாக உடல் உழைப்பை தருகின்றபோது சிறந்த படைப்பு உருவாகின்றது. இந்த பின்னனியைக் கொண்டு நாம் முதல் வாசகத்தை புரிந்து கொள்ள முடியும்.
இரண்டு வகையான மனிதர்கள் வாழ்கின்றார்கள். ஒருவர் ஞானமுடையவர். மற்றவர் மதிகேடு அல்லது பேதமையுடையவர். ஞானம் தன்னிடம் உள்ள ஆற்றலை பயன்படுத்தி ஏழு தூண்களைக் கொண்டு வீட்டை உருவாக்குகிறது. உணவு சமைக்கின்றது. உணவை உண்ண பிறருக்கு அழைப்பு விடுக்கிறது.
விவிலிய பார்வையில் ஞானம், வீடு என்பது கோவிலை குறிக்கக் கூடியது. சாலமோன் அரசன் ஆண்டவருக்கு என்று இல்லம் ஒன்றை உருவாக்கினான். அந்த கோவிலில் ஏழு தூண்கள் இருந்தன.(1 அரசர் 7:17) இந்த ஏழு தூண்கள் பாதுகாப்பை குறிக்கின்றது. அதாவது, ஆண்டவரின் இல்லத்தில் வாழ்வோர் பாதுகாப்பை பெறுவர். திருத்தூதர் பவுல் 1 கொரிந்தியர் 1: 30ல் இயேசுக் கிறிஸ்துவை ஞானமாக குறிப்பிடுகிறார். கிறிஸ்துவில் வாழ்பவர் வாழ்வைப் பெறுவர். எனவே கடவுளை, கிறிஸ்துவை தேடி வருபவர்கள் வாழ்வை பெற்றுக் கொள்வார்கள். அந்த இல்லத்தில் வாழ்பவர்களுக்கு உணவாக இறைவன் இருக்கின்றார். “விண்ணகத்திலிருந்து இரங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே,” (யோவான் 6:51) இறைவனின் இல்லத்தில் வாழ்பவர்களுக்கு இயேசுவே உணவாக இருக்கின்றார் என்பதை இன்றைய நற்செய்தி கூறுகிறது. இன்றைய திருப்பாடலும் இதை நமக்கு உறுதிபடுத்துகிறது. “ஆண்டவர் எத்துனை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்” (திருப்பாடல் 34: 8)
இரண்டாம் வகையான மனிதர்கள் மதிகேடுயுடைவர், ஞானத்திற்கு எதிரான பண்புகளை கொண்டவர். மதிகேடு உடைய மனிதர்கள் அறிவில்லாத, எதற்கும் கவலை கொள்ளாத மனநிலை உடையவர்கள்.(நீதிமொழி 9:13). தான்தோன்றித் தனமாக வாழக்கூடியவர்கள். மதிகேடரைப் பார்த்து “அறியாப் பிள்ளைகளே, இங்கு வாருங்கள்” (நீதிமொழகள் 9:16) என்று அழைப்புவிடுப்பர்.
அவர்களிடம் செல்வோருக்கு வாழ்வு அல்ல, மாறாக சாவு தான் கிடைக்கும். பாலைவனத்தில் நாற்பது ஆண்டுகளாய் அலைந்தபோது இஸ்ரேயல் மக்களுக்கு இறைவன் அவர்களுக்கு மன்னா என்ற உணவை வழங்கி அவர்களின் பசியைப் போக்கினார். ஆனால் மன்னா உணவை வழங்கிய இறைவனை பின்பற்றாமல், மன்னாவை மட்டும் தேடினர். அதனால் அழிந்து போயினர். இதைத்தான் யோவன் 6ல் பார்க்கிறோம். மன்னாவை உண்டவர்கள் மடிந்து போயினர் என்று.
ஞானத்தை எவ்வாறு அடைய முடியும் என்பதை இன்றைய இரண்டாம் வாசகத்தில் எபேசியருக்கு எழுதிய திருமடலின் வழியாக கற்றுத்தருகிறார்.
• இறைவன் நமக்கு வழங்கிய காலத்தை நன்கு பயன்படுத்த வேண்டும்
• மதுவிற்கு அடிமையாகமல், குடிவெறியை விட்டு விலகுங்கள்
• இறைவனின் திருவுளத்தை அறிந்து அதற்கு ஏற்ப வாழுங்கள்
• இறைவனைப் புகழுங்கள்
• இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்
இவ்வாறு ஒருவர் வாழும்போது ஞானத்தை கண்டடைவார்.
இதை இன்றைய நற்செய்தியில் இயேசு உறுதிபடுத்துகிறார். ஞானமாகிய கிறிஸ்துவில், இறைவனில் வாழ வேண்டுமெனில் அவரது நற்கருணையில் நாம் பங்கு பெறவேண்டும். பங்குபெறுதல் என்பது அவரில் இணைந்திருத்தல். யோவான் 15:5, “நானே திராட்சைச் செடி: நீங்கள் அதன் கிளைகள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார்”. ஆக இறவனுடைய வார்த்தையில், நற்கருணையில் இணைவோம். இறைவன் நமக்கு வழங்கியுள்ள ஞானத்தை பயன்படுத்தி, இறைவனின் திருச்சட்டங்களையும் கட்டளைகளையும் பின்பற்றி வாழும்போது வாழ்வை பெறுவோம். ஞானத்தை பின்பற்றுவோம். மதிகேடு மற்றும் பேதமையை விட்டுவிலகுவோம்.
- அருட்பணி. அமல ஞான பிரபு, மதுரை.
Comments