உருமாற்றம் அடைவோம், புதிய மனிதர்களாய் வாழ்வோம்.
- உருமாற்றம் அடைவோம், புதிய மனிதர்களாய் வாழ்வோம்.
இன்று நாம் ஆண்டவர் இயேசுவின் உருமாற்றப் பெருவிழாவை கொண்டாடுகின்றோம். 1945ம் ஆண்டு ஆகஸ்ட் 6 மற்றும் 9 ஆகிய நாள்களில் ஜப்பான் நாட்டின் கிரோஸிமா, நாகசாயி என்ற இரு நகரங்கள் அணுகுண்டு வீசப்பட்டு அழிக்கப்பட்டன. மக்களின் வாழ்வு கேள்விக்குறியானது. அந்நகரில் பிறந்த குழந்தைகள் அணுக்கதிர்வீச்சின் காரணமாக உரு சிதைந்து பிறந்தன. ஆனால், மக்கள் துவண்டு போய்விடவில்லை, மாறாக தங்களது அயராத உழைப்பினால் தங்களது துயரை, வேதணையை வெண்று புதிய மனிதர்களாக உருமாற்றம் பெற்றார்கள்.
மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை ஒவ்வொரு நொடிப்பொழுதும் மாற்றங்கள் நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றது. தனக்குள்ளாக உடல் சார்ந்த மாற்றம் ஏற்படுகின்ற அதேவேளையில் சமூகம், அறிவியல், தொழில்நுட்பம், வரலாற்று மாற்றங்கள் நிகழ காரணமாகவும் மனிதன் அமைகின்றான். ஆனால், உள்ளம் சார்ந்த மாற்றங்களில் இன்னும் பின்தங்கி இருக்கின்றான். ஏனெனில் தன்னுடைய சுயத்தை முதன்மைப்படுத்தி, இறைமையையும், மனிதத்தை பின்னிலை படுத்துகின்றான். அதற்கு மாற்றாக, ஆண்டவர் இயேசு இறைமையையும், மனிதத்தையும் முன்னிலைப்படுத்துகிறார். சென்ற இடங்கள் எங்கும் இறைவன் பெயரால் நன்மை செய்தார். பார்வையற்றவர் பார்வை பெற்றனர். உடல் நலம் அற்றோர் நலம் பெற்றனர். இறந்தவர் உயிர் பெற்றனர்.
இயேசு, இறைவனின் மகனாக இருந்தாலும், தன்னுடைய சுயத்தை விடுத்து இறைத் தந்தையின் திருவுளத்தை முழுமையாக நிறைவேற்றத், தன்னை முழுவதுமாக அர்ப்பணித்தார். அதன் விளைவாக, பரிசாக, 'என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன,;'(மத்தேயு 17:5) என்று தந்தை இறைவன் இயேசுவில் பெருமகிழ்ச்சி அடைந்தார். இயேசு மட்டுமல்ல, அவரால் ஆட்கொள்ளப்பட்ட மனிதர்களும் உருமாற்றம் பெற்றார்கள் சீமோன் பேதுருவாக மாறுகின்றார். சவுல் பவுலாக மாறுகின்றார். கடவுளின் திருவுளத்திற்கு ஏற்ப வாழ்வை அர்பணித்தார்கள். தங்களுடைய கடந்த கால வாழ்விலிருந்து, பாவத்திலிருந்து மாற்றம் பெற்று புதிய மனிதர்களாக உருமாற்றம் பெற்றார்கள்.
பாவத்திலிருந்து புனிதத்திற்கும், அடிமைத்தனத்திலிருந்து விடுதலைக்கும், தீமையிலிருந்து நன்மைக்கும், சாவிலிருந்து வாழ்விற்கும், எப்பொழுது நாம் உருமாற்றம் பெறப்போகின்றோம்? 'கடவுளே, உமது பேரன்புகேற்ப எனக்கு இரங்கும்: உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும்'(திருப்பாடல் 51:1) என்று தாவீது இறைவனிடம் மன்றாடி தனது கடந்தகால வாழ்விலிருந்து புதுவாழ்வை பெற்றதுபோல், நாமும் கடந்தகால வாழ்விலிருந்து புதிய வாழ்வு பெற, இறைத்திருவுளம் அறிந்து வாழ்வோம், இறைவனில் உருமாற்றம் பெறுவோம். ஏனெனில், 'கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்,'(மாற்கு 3:35) என்ற இயேசுவின் வார்த்தைகளைப் பின்பற்றி நம்மை முழுமையாக இறைவனுக்கு அர்ப்பணிப்போம். ஆப்பொழுது நம் வாழ்வை முன்னிட்டு இறைவன் நம்மில் மகிழ்வார்.
அன்புடன்
அருட்பணி. அமல ஞான பிரபு, மதுரை.
Comments