ஆண்டவரைப் பின்பற்றுவோம்
நமது அன்றாட வாழ்வை சற்று நினைவுபடுத்த விரும்புகிறேன். நாம் உடுத்தும் உடை, பயன்படுத்தும் பற்பசை, எண்ணெய். வண்டி, உணவுப் பொருள்கள், என்று ஒவ்வொன்றையும் நாம் தேர்ந்தெடுத்து பயன்படுத்துகிறோம். வாழ்க்கையும் அவ்வாறே. சில நேரங்களில் நம்முடைய மனதிற்குப் பிடித்த நபர்களுடன் நேரத்தை செலவிடும்போது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகின்றது. பிடிக்காத மனிதர்களுடன் வாழ்தல் என்பது துயரைத் தரக்கூடியது. இவ்வாறு நாம் எடுக்கும் முடிவுகள் நமது வாழ்வில் மகிழ்ச்சியையும், வேதணையையும் தருகிறது. இதன் விளைவாகவே சில நேரங்களில் வாழ்வின் முக்கிய தருணங்களை முடிவு செய்வதில் குழப்பத்திற்கு உள்ளாகிறோம். ஆனால் இன்றைய வாசகங்கள் நம்மை தீர்க்கமாண, உறுதியான முடிவைத் தேர்ந்தெடுக்க நமக்கு அழைப்பு விடுக்கிறது.
எகிப்தில் பாரவோன் மன்னனுக்கு அடிமைகளாய் வாழ்ந்த மக்களை மீட்டு, தான் கொடுத்த வாக்குறுதியின் படி கானான் நாட்டிற்கு அழைத்து வருகிறார் இறைவன். இறைவன் தான் சொன்னபடி “நீங்கள் என் மக்கள் நான் உங்கள் கடவுள்” என்ற கட்டளையில் நிலைத்து இருக்கிறார். ஆனால் மக்கள் அவ்வாறு நிலைத்து நிற்கமால் அந்நிய தெய்வங்களை வழிபடுகின்றார்கள். தங்களுக்கு விடுதலை வாழ்வை வழங்கிய இறைவனை மறந்து விட்டு வேற்றுத் தெய்வங்களை மக்கள் வழிபடுகிறார்கள். இந்நிலையில் கானான் நாட்டில் நுழைவதற்கு முன்பு, யோசுவா தன்னுடைய நிலைபாட்டை உறுதிபடுத்துகிறார். நானும் என் வீட்டாரும் ஆண்டவருக்கே பணிபுரிவோம். நீங்கள் உங்களிடையே இருக்கும் வேற்று தெய்வ வழிபாட்டை விட்டுவிடத்தயாரா? நீங்கள் யார் பக்கம்? என்று கேள்வியை முன்வைத்து இறைவன் இஸ்ரேயல் மக்களுக்கு செய்த நன்மைகளை விளக்குகிறார்.
இன்றைய நற்செய்தியில் இயேசு தன்னை வாழ்வு தரும் உணவு என்று அறிவித்த பொழுது, மக்கள், அவரைப் பின்பற்றியச் சீடரகள் அவரை விட்டு விலகிச் செல்கிறார்கள். நீங்களும் என்னை விட்டு விலகிச் செல்ல விரும்புகின்றீர்களா? என்ற கேள்வியை திருத்தூதர்கள் முன் வைக்கின்றார்.
யோசுவா கேள்வியை முன்வைத்தபோது மக்கள் தங்கள் தவறை விடுத்து நாங்களும் ஆண்டவருக்கே பணிபுரிவோம் என்று வாக்குறுதி வழங்கி ஆண்டவரை தேரந்து கொண்டனர். இயேசு கேள்வியை முன்வைத்தபோது திருத்தூதர் சீமோன் பேதுரு “ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்ததைகள் உம்மிடம்தானே உள்ளன,” என்று சொல்லி திருத்தூதர்களின் நிலைப்பாட்டை அறிவிக்கின்றார். இதை;தான் எபேசியருக்கு எழுதிய திருமடலில் திருத்தூதர் பவுல் கணவன் - மனைவி இடையே உள்ள அன்பு உறவை முன்னிலைப்படுத்தி விளக்குகிறார். கணவன் மனைவி இருவரும் தாங்கள் கொடுத்த வாக்குறுதியில் நிலைத்து இருந்து அன்பு செய்ய வேண்டும். மாசற்றவர்களாய் தூய்மையான மனதுடன் ஒன்றித்து வாழவேண்டும். அதைப்போன்று தான் தூய்மை நிறைந்த இதயத்தோடு எவ்வித குறைபாடு இல்லாமல் கடவுளைப் பின்பற்ற நமக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாம் முயற்சிகளை மேற்கொள்வோம். நாம் ஆண்டவருக்கு பணிபுரிவோம்.
- அருட்பணி. அமல ஞான பிரபு, மதுரை.
Comments