“துணிவோடிருங்கள்: நான்தான் அஞ்சாதீர்கள்” (மத்தேயு 14:27)
“துணிவோடிருங்கள்: நான்தான் அஞ்சாதீர்கள்” (மத்தேயு 14:27)
பயம் பல்வேறுவிதமான விளைவுகளை நமக்கு ஏற்படத்துகின்றன:
1. நமது உடல் மற்றும் உள்ளம் சார்ந்த நலத்தை அழிக்கின்றது
2. நமது நினைவாற்றலை அழிக்கின்றது
3. நம் மீதும், பிறர் மீதும் உள்ள நம்பிக்கையை அழிக்கின்றது
4. நாம் புதிய முயற்சிகளை மேற்கொள்ளவிடாமல் தடுக்கின்றது
நான் சிறுவனாக இருந்தபோது, மற்றவர்களைப்போல் நீச்சல் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற விருப்பத்தை என் தந்தையிடம் தெரிவித்தேன். எனக்கு நீச்சல் கற்றுக்கொடுக்க எங்களது உறவினர் தோட்டத்தில் உள்ள கிணற்றுக்கு அழைத்துச்சென்றார். கிணற்றைப் பார்த்தவுடன் ஒருவிதமான பயம் தொற்றிக்கொண்டது. “நான் இருக்கிறேன், பயப்படவேண்டாம்” என்ற எனது தந்தையின் வார்த்தை எனது பயத்தை நீக்கியது. எனது தந்தையின் உதவியால் நீச்சல் நன்கு பழகினேன். இந்நிகழ்வை நினைத்துப் பார்க்கும்போது, சில, விவிலிய மாந்தர்கள் எனது மனதில் தோன்றினார்கள். அவர்களது வாழ்வில் அச்சம் தோன்றிபோது, இறைவனின் துணையால், அச்சத்தை வென்று இறைபணியை நிறைவுசெய்தார்கள். ஆம். நமது அன்புக்குரியவர்களின் உடனிருப்பும், நம்பிக்கையான வார்த்தைகளும் எல்லாவிதமான பயத்தை நீக்கும்.
எகிப்தில் அடிமைகளாக இருக்கும் இஸ்ரேயல் மக்களை, பார்வோன் மன்னனின் அடிமைத்தளையிலிருந்து மீட்க, மோயீசனை இறைவன் தனது பணிக்கென அழைத்தபோது, “நாவன்மை அற்றவன் நான்! ஏனெனில், எனக்கு வாய் திக்கும்: நாவும் குழறும்”(விடுதலைப்பயணம் 4:10) என்று தனது அச்சத்தை வெளிப்படுத்துகின்றார். ஆனால், இறைவன் அவரது அச்சத்தை நீக்குகின்றார். மக்களை அடிமைத்தனத்திலிருந்து மீட்கின்றார்.
சவுல் அரசனாக இருக்கின்போது, பெலிஸ்தியர்களின் படைகளையும், கோலியாத்தையும் இஸ்ரேயலர் கண்டு அஞ்சியபோது, சிறுவன் தாவீது இறைவனின் துணையால் கூலாங்கற்களைக் கொண்டு கோலியாத்தை வீழ்த்தி படைவீரர்களின் அச்சத்தை களைகின்றான்.(1 சாமுவேல் 17)
இன்றைய நற்செய்தி வாசகத்தில், தம்முடைய சீடர்களை மறுகரைக்கு படகில் அனுப்பிவிட்டு, தனிமையில் இறைவணிடம் செபிக்க, ஆண்டவர் இயேசு மலைக்கு செல்கிறார். கடலில் வீசிய எதிர்காற்றினால் அவர்களது படகு அலைகளால் அலைக்கழிக்கப்படுகிறது. படகு மட்டுமல்ல, அவர்களது வாழ்வும் அலைக்கழிக்கப்படுகிறது. வாழ்வு முடிந்து விட்டது என்று அச்சப்படுகின்றனர். அந்நேரத்தில்;, சீடர்கள் உள்ள படகை நோக்கி இயேசு கடலில் நடந்து வரும்பொழுது, அவரைக் கண்டும் பயப்படுகிறார்கள். ஏனெனில் அவர்கள் உள்ளம் விரக்தியினால் காயப்பட்டிருந்தது. “துணிவோடிருங்கள்: நான்தான் அஞ்சாதீர்கள்,” (மத்தேயு 14:27) என்று இயேசு கூறுகின்றபோது அச்சம் அவர்களைவிட்டு நீங்கிற்று. ஏனெனில், ஆண்டவரின் வார்த்தையில் நம்பிக்கை கொண்டார்கள். ஆண்டவர் இயேசுவைப் போன்று, தானும் கடல் மீது நடந்து வர பேதுரு ஆசை படுகின்றார். இயேசுவின் மீது தனது கண்களைப் பதிய வைத்தபோது, அவரால் கடலில் நடக்க முடிந்தது. ஆனால், தனது கண்களை இயேசுவிடமிருந்து அகற்றிய போது அவர் கடலில் மூழ்குகின்றார்.
இந்நிகழ்வு நமக்கு கற்றுத்தரும் பாடம் ஒன்றுதான்: கடவுள் மீது நம்பிக்கை கொள்வோம், அவர் மீது நமது கண்களைப் பதிய வைப்போம். ஏனெனில், தாயின் கருவில் உருவாகும் முன்பே நம்மை பெயர் சொல்லித் தேர்ந்த இறைவன் நம்மை ஒரு நாளும் கைவிடமாட்டார். மாறாக, நம்மிடம் உள்ள அச்சமே, நம்மை, கடவுளிடமிருந்து பிரிக்கின்றது. ஆனால் எந்நேரமும் கடவுள் தம்முடைய கண்களையும், இதயத்தையும் நம்மீது பதிய வைத்துள்ளார்.(1 அரசர் 9:3). அந்த கடவுள் மீது நம்பிக்கை கொள்ளும்போது, நம் வாழ்வில் உள்ள புயலைப் போன்ற துயரங்கள், வேதணைகள், பயங்கள் நம்மை விட்டு அகலும். இயேசுவின் உயிர்ப்பு அனுபவம் பெற்ற, தோமா தனது அவநம்பிக்கையை நீக்கி, இயேசுவைப் பார்த்து “நீரே என் ஆண்டவர்: நீரே என் கடவுள்”(யோவான் 20:28) தனது நம்பிக்கையை உறுதிபடுத்துகிறார். அந்த நம்பிக்கையின் பொருட்டு, அச்சத்தை விலக்கி நற்செய்தி அறிவித்து தனது உயிரை இயேசுவிற்கு அர்பணிக்கிறார். ஆம். அச்சத்தை விலக்குவோம். கடவுள் மீது நம்பிக்கை கொள்வோம். ஏனெனில் கடவுள் என்றும் நம்மோடு.
- அருட்பணி. அமல ஞான பிரபு, மதுரை.
Comments