தடைகளாய் அல்லஇ இறையாசீராய் மாறுவோம்.
"சிறு குழந்தைகளை என்னிடம் வரவிடுங்கள் ஏனெனில் இறையாட்சி அவர்களுக்குரியது."
நமது வீடுகளில் உள்ள பிள்ளைகளை திருவிழா நாட்கள், பிறந்தநாள் மற்றும் முக்கியமான நாட்களில் எல்லாம் தங்களுடைய நெற்றியில் பெரியவர்கள் சிலுவை அடையாளம் இட்டு ஆசீர் பெறச்சொல்வது, சிறந்த பண்பாகப் பார்க்கப்படுகிறது. அதைப்போன்று தான், யூத சமுகத்தில் மதக்குருக்கள், இராபிக்களிடம் சிறு குழந்தைகளை பெற்றோர் அழைத்து வந்து ஆசீரை பெற்றுச் செல்வது வழக்கம். இன்றைய நற்செய்தியில் கூட, ஆண்டவர் இயேசுவிடம் ஆசீர் பெற தங்கள் பிள்ளைகளை பெற்றோர் அழைத்து வருகிறார்கள். ஆனால் இயேசுவின் சீடர்கள் அவர்களைத் தடுக்கின்றார்கள். அதைக் கண்டு இயேசு தன்னுடைய சீடர்களை கடிந்து கொள்கிறார். பிறகு சிறு குழந்தைகள் மீது தம் கைகளை வைத்து ஆசீர் வழங்குகிறார்.
நாமும் சில நேரங்களில் அந்தச் சீடர்களைப் போன்றுஇ நாம் குழந்தைகளின் வளர்ச்சிக்கு தடைக்கல்லாக மாறிவிடுகிறோம். அவர்களுடைய வளர்ச்சியில் அக்கறை என்ற பெயரில் குழந்தைகளிடம் இருக்கக்கூடிய இயல்பான வளர்ச்சிக்கு தடைகளை உருவாக்குகிறோம். நமது பிள்ளைகள் நன்கு படிக்க வேண்டும் என்று, மணப்பாடக் கல்வியைத் தவிர வேறு எதையும் அவரகளுக்கு நாம் வழங்குவதில்லை. இன்று உள்ள பெரும்பாலான பள்ளியில் விளையாட்டு நேரம் என்பது கணிதம், அறிவியல் மற்றும் ஆங்கிலம் போன்ற பாடங்களை நடத்துவதற்கான வகுப்பாக மாறிவிட்டது. இதனால், மாணவர்களிடம் உள்ள கற்பனைத் திறன் மழுங்கடிக்கப்படுகிறது. பள்ளியின் 100ம% தேர்ச்சியில் அக்கறை கொள்ளக்கூடிய நாம் மாணவர்களின் உளவியல் வளர்ச்சயில் மிகவும் பின்தங்கி விடுகிறோம். இதன் விளைவாக சிறுவயதிலே மாணவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவது இன்று அதிகரித்து வருகிறது.
அதிலும் பெருநகர பெற்றோர்கள் குழந்தைகள் தங்களது நேரத்தை பிடுங்கி கொண்டுவிடுவார்களோ என்ற பயத்தில் அவர்களை ஷப்பிங் மால், சினிமா தியேட்டர் என்று தள்ளிவிடுகிறார்கள். அது சில நாட்களிலே போரடித்துவிடுகிறது. ஆகவே எதையாவது கற்றுக் கொள்ளட்டும் என்று சிறப்பு வகுப்புகளுக்கு அனுப்பிவிடுகிறார்கள். சிறையில் இருப்பவர்கள் கூட தினமும் அரைமணி நேரம் நடக்கவும் விளையாடவும் அனுமதிக்கபடுகிறார்கள். ஆனால் நம் வீட்டு பிள்ளைகள் கோடை விடுமுறையிலும் எதையாவது படிக்க மட்டுமே வேண்டும் என்ற மனப்பாங்கே நம்மிடம் உள்ளது.
விளையாட்டு வெறும் பொழுது போக்கு மட்டுமில்லை .அது வெற்றி தோல்வியை புரிய வைக்கிறது போராட கற்று தருகிறது போட்டி மனப்பான்மையின் அவசியத்தை புரிந்து கொள்ள வைக்கிறது. தனித்திறன்களை வெளிப்படுத்த வைக்கிறது. கற்று தருகிறது. கற்க வைக்கிறது. புதிய நட்பை உருவாக்குகிறது. புதிய வெற்றிகளை பரிசாக தருகிறது. வீரத்தழும்புகளை உருவாக்குகிறது. அதுவரை இருந்த நமது அடையாளங்களை புதுப்பித்து மாற்றுவடிவம் தருகிறது. இத்தகைய அனுபவங்கள் பெறாததன் விளைவாக, தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இச்செயலுக்கு நாம் ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது.
வீடுகளுக்குள் ஒடுங்கி இருந்து பார்வை சுருங்கி போன சிறுவர்களுக்கு முடிவில்லாத வெட்ட வெளியை. மரங்களை, அணில்களை, பறவைகளை, ஆகாசத்தைஇ இரவு நேரத்தின் அடர்ந்த நட்சத்திரங்களை காட்டுங்கள். கானகங்களை அறிய செய்யுங்கள். கதை பேசுங்கள். கதை சொல்ல செய்யுங்கள். விளையாட அனுமதியுங்கள். நம் பயத்தை குழந்தைகளின் மீது திணிப்பதால் அவர்கள் தங்களது இயல்பை இழக்கிறார்கள். அது அவர்களது இளமையை மட்டுமில்லை வாழ்க்கை முழுவதையுமே அர்த்தமற்றதாக்க செய்துவிடும் என்றே தோன்றுகிறது.
உலகைஇ இயற்கையை பார்க்க, இரசிக்க கற்றுக் கொடுங்கள். புதிய மணிதர்களை சந்திக்கட்டும். வாழ்க்கை வசந்தமாகும். அப்படி வாழ்க்கை வசந்தமாக மாறும் பொழுது அவர்கள் வாழ்வில் நீங்கள் இறையாசீராய் மாறுவீர்கள். வாழ்க்கை வசந்த மாகட்டும்.
- அருட்பணி. அமல ஞான பிரபு, மதுரை.
Comments