தேடுங்கள் விண்மீனைக் கண்டடைவீர்கள் !
முதல் வாசகம் : எசா 60: 1-6
திபா 72: 1-2. 7-8. 10-11. 12-13 (பல்லவி: 11)
இரண்டாம் வாசகம் : எபே 3: 2-3, 5-6
நற்செய்தி வாசகம் : மத்தேயு 2: 1-12
எழு! ஒளிவீசு! உன் ஒளி தோன்றியுள்ளது.
அனைவருக்கும் ஆண்டவரின் திருட்காட்சிப் பெருவிழா வாழ்த்துக்கள். கிறிஸ்து பிறப்பு விழாவின் இறுதி விழாவாக இன்றைய விழாவை சிறப்பு செய்கின்றோம். கீழைத் திருஅவையில் இன்றைய நாளை கிறிஸ்து பிறப்பு விழாவாக கொண்டாடுவார்கள், ஏனெனில் புறவினத்து ஞானிகள் கிறிஸ்துவை கண்டதால் இந்நாள் அவர்களுக்கு கிறிஸ்து பிறப்பு விழா. இன்றை நாளில் ஞானிகள் வழியாக இறைவன் நமக்கு வழங்கும் நற்செய்தி : தேடுங்கள் கண்டடைவீர்கள். எழு! ஓளிவீசு! உன் ஒளி தோன்றியுள்ளது.
உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் பவுலோ கொய்லோ (Paulo Coelho) எழுதிய இரசவாதம் (The Alchemist) என்ற நாவல் சந்தியாகு என்ற ஆடு மேய்க்கும் சிறுவனின் கனவு மற்றும் அவனது பயணங்கள் பற்றிய தேடல்தான் கதையின் மையக்கரு. ஸ்பெயினிலிருந்து எகிப்தில் உள்ள பிரமிடுகளில் உள்ள புதையலை கண்டுபிடிக்க பயணம் மேற்கொள்ளும் சிறுவன் புதையல் ஒன்றை கண்டறிகிறான். அந்த புதையலை கண்டறிய சிறுவன் மேற்கொள்ளும் தியாகங்கள் நம்வாழ்வோடு தொடர்புடையவை. நமக்குள் இருக்கும் தயக்கமும், பயமும் நம்மை விட்டு அகலும்போது நம்முடைய கனவுகளும், தேடல்களும் முழுமை அடைகின்றன. பயணங்கள்தான் நமக்கு வாழ்வை கற்றுத்தருகின்றன.
Everything you need to know you have learned through your journey.
தேடுங்கள் கண்டடைவீர்கள்
கீழ்த்திசை ஞானிகள் விண்ணில் தோன்றிய விண்மீனைக் கண்டு ஆண்டவர் இயேசுவை கண்டறிய தங்களுடைய உறவுகள், நாடுகள் அனைத்தையும் உதறிவிட்டு தேடலில் ஈடுபடுகிறார்கள்.
இயேசுவை பின்பற்ற வேண்டும் என்ற தேடலில் உள்ள பணக்கார இளைஞனுக்கு செல்வம் தடையாக இருக்கிறது. உன்னிடம் உள்ளதையெல்லாம் விற்று ஏழைகளுக்கு கொடு என்று இயேசு சொல்லிய போது அந்த இளைஞன் முகவாட்டமாய் செல்கிறான் (மத்தேயு 19:16-30). நீதியை தேட வேண்டிய பிலாத்து தன்னுடைய பதவியை தக்க வைத்துக்கொள்வதற்காக இயேசுவிற்கு அநீத தீர்ப்பு வழங்கி நீதியை கொலை செய்கின்றான் (மத்தேயு 24:14-25). நீதியின் தேடல் கானல் நீராய் மாறிவிடுகிறது. சக்கேயு என்ற மனிதன் தனது உயரத்தினால் மட்டுமல்ல மாறாக உள்ளத்திலும், வாழ்விலும் குறைவுடையவராய் இருக்கிறார். ஆனால் இயேசுவை கண்டடைய வேண்டும் என்ற அவருடைய தேடல், அவரை உயர்ந்தவராக மாற்றுகிறது. மீட்பை பெறுகிறார். வாழ்வை கொடையாகப் பெறுகிறார் (லூக்கா 19:1-10)
கீழ்த்திசை ஞானிகள், தங்களுடைய தேடல்களில் தடைகள் வந்த பொழுதும், துவண்டு விடாமல் ஆண்டவர் இயேசு தேடி மகிழ்வை, மீட்பை, வாழ்வை கொடையாகப் பெறுகிறார்கள். ஆம், தேடல் உள்ளவர்களால் மட்டும்தான் கண்டடைய முடியும்.
எழு! ஒளிவீசு! உன் ஒளி தோன்றியுள்ளது! (எசாயா 60:1)
“வானவெளி மண்ணை நழுவி
விழுந்ததென்ன
திசையெல்லாம் மழையில் கரைந்து
தொலைந்ததென்ன”
இந்தப் பாடலின் வரிகளை வாசிக்கும் போது
மழையில் கரைந்து தொலைவதுபோல் வாழ்க்கை தொலைந்து விட்டது என்று நாம் வேதனை படுவதுண்டு. ஏனெனில் நம்மில் பலருக்கும் உள்ள சிந்தனை : வாய்ப்பு என்பது ஒருமுறை மட்டுமே. ஆனால் இறைவன் நமக்கு மீண்டும் வாய்ப்புகளை வழங்குகிறார், அதை நாம் கண்டறிகிறோமா? என்பதுதான் தேடலுக்கான புதையல்.
விண்மீனைப் பின்பற்றி மெசியாவைத் தேடிய ஞானிகள் ஏரோதிடம் செல்லும் போது விண்மீனைத் தொலைக்கின்றனர். ஆனால், ஏரோதை விட்டு அகலும் போது வழிகாட்டியான விண்மீனை மீண்டும் கண்டு மெசியாவை அடைகின்றார்கள்.
தங்களுடைய பாவத்தினால் இறைவனின் ஒளியை இழந்து அடிமைகளாய் இருக்கும் மக்கள், மீண்டும் இறைவனைத் தேடுகின்ற போது, இருளிலிருந்து விலகி, எவ்வாறு மீண்டும் ஒளி பெற்று ஒளிவீசுகிறார்கள் என்பதை இறைவாக்கினர் எசாயா முதல் வாசகத்தில் வெளிப்படுத்துகிறார் (எசாயா 60:1-6)
புறவினத்து மக்கள் நற்செய்தியில் நம்பிக்கை கொண்டு கிறிஸ்துவின் வழியாய் வாழ்வை இரண்டாம் முறையாகப் பரிசாகப் பெறுகிகின்றார் என்பதை இரண்டாம் வாசகம் சுட்டிக்காட்டுகின்றது (எபேசியர் 3:5-6).
ஊதாரி மைந்தன் தன் தீய வழியினால் வாழ்வைத் தொலைத்தாலும், மனந்திருந்தி தன்னுடைய தந்தையிடம் மன்னிப்பை வேண்டுகின்ற போது தொலைத்த வாழ்வை மீண்டும் பெற்றுக்கொள்கிறான் (லூக்கா 15:11-32).
நம்முடைய வாழ்வில், சில நேரங்களில் நமது தவறுகளால் வாழ்வை இழந்து, தவக்கின்ற சூழலில் இறைவன் நமக்கு மீண்டும் வழங்கும் வாய்ப்பைக் கொண்டு வாழ்வை கண்டடைய வேண்டும்.
கடந்த காலங்களில், நாம் தொலைத்த முதல் விண்மீனை ஏன் தொலைத்தோம் என்பதை உணர்ந்து, நம்முடைய வாழ்வில் இருக்கும் ஏரோதை விட்டு அகன்று, தேட வேண்டிய புதையலாகிய, வாழ்வாகிய, மீட்பாகிய இயேசுவை நாடுகின்ற போது, தேடுகின்ற போது நம்முடைய வாழ்விலும் ஞானிகளைப் போன்று இரண்டாம் முறை விண்மீன் நம்மில் ஒளிரும். நாமும் எழுந்து ஒளிவீசுவோம்.
அருள்பணி. அமல ஞான பிரபு, மதுரை.
Comments